மரணக் கலாச்சாரம் : இந்தியாவில் ஒரே வருடத்தில் 1.5 கோடி கருக்கலைப்பு
இந்தியாவில் கருக்கலைப்பு சட்டத்தை மாற்றக்கோரி பல போராட்டங்கள் நடைப்பெற்று வரும் நிலையில் 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வரிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது . கடந்த 15 வருடங்களாக ஆண்டிற்கு சுமார் 7 இலட்சம் கருக்கலைப்புகள் நடைபெறுவதாக அரசாங்கம் அறிவித்து வந்தது. இதில் சட்டவிரோதமாக செய்யப்படும் பெண் சிசுக்கொலை மற்றும் மாத்திரைகள் மூலம் வீட்டிலேயே செய்யப்படும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படவில்லை. இதனால் இப்பிரச்சனையின் வீரியமும் அதைச்சார்ந்த விழிப்புணர்வும் இல்லாமற்போனது.
UK AID, மெக்கார்த்தர், ஃபோர்ட் ஃபவுண்டேஷன் மற்றும் பேக்கர்ட் ஃபவுண்டேஷனின் நிதியுதவியுடன் மும்பையிலுள்ள IIPS ஆராய்ச்சி நிறுவனத்தால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாடளவில் நடைபெறும் கருக்கலைப்பு வீதமும் திட்டமிடப்படாத கருத்தரிப்பு வீதமும் கணக்கெடுப்பதே இவ்வாய்வின் நோக்கம்.
ஆய்வின் முடிவுகள்
இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 1.5 கோடி குழந்தைகள் கருக்கலைப்பு மூலம் கொல்லப்பட்டனர் என்பது இந்த ஆய்வு வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல் .இதில் 34 இலட்ச கருக்கலைப்புக்கள் மருத்துவமணையில் மேற்கொள்ளப்பட்டவை எனவும் 1.15 கோடி கருக்கலைப்பு மருத்துவமணைக்கு வெளியே மேற்கொள்ளப்பட்டவை எனவும் 8 இலட்ச கருக்கலைப்பு இதர வழிகளில் நடைப்பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்தியாவை பொறுத்தவரை, கருத்தரிக்கும் 1000 பெண்களில் 47 பேர் கருக்கலைப்பு செய்கின்றனர். 81% கருக்க்கலைப்புகள் மாத்திரைகள் மூலம் செய்யப்படும் இரசாயனக் கருக்கலைப்பாகும். மேலும் 14% கருக்கலைப்புகள் அறுவை சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பு எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வருடத்திற்கு ஒன்றரைக் கோடி உயிர்பலி ஏற்படுவதை ஒப்பிட்டுப் பார்க்க நேர்ந்தால் ஒரே வருடத்தில் ஆஸ்திரேலிய கண்டத்திலுள்ள பாதி மக்களை கொன்றுகுவித்ததற்கு சமம். சீனக் கொடுங்கோல் அரசால் மேற்கொள்ளப்பட்ட கட்டாய கருக்கலைப்பு எண்ணிக்கைக்கு நிகராக உள்ளது நம் நாட்டில் உள்ள கருக்கலைப்பு எண்ணிக்கை.
நம் நாட்டின் கருக்கலைப்பு சட்டத்தின்படி சில நிபந்தனைகளின் அடிப்படையில் 20 வாரம் வரை கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகின்றது. கற்பழிப்பு, கருவிலுள்ள சிசுவின் குறைபாடு, தாயின் உடல் நல பாதிப்பு போன்ற காரணங்களுக்காக கருக்கலைப்பு மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கின்றது . இச்சட்டம் மிகவும் கடுமையானதென, அதனை மாற்றக்கோரி பல பெண்ணியவாத அமைப்புகள் போராடி வருகின்றன. தற்போதைய சட்டத்தின் அடிப்படையிலேயே 1.5 கோடி உயிரிழப்பு ஏற்படும் நிலையில் அதனை மேலும் எளிதாக்குவதால் ஏற்படும் பயங்கர விளைவுகளை கருத்தில் கொள்வது மிகவும் அவசியம்.
- கருக்கலைப்பு செய்யும் முறைகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள…
- கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சிபற்றி அறிவியல் சார்ந்த உண்மை …
கருக்கலைப்பை முன்வைத்து இயங்கும் பில்லியன் டாலர் தொழில் வர்த்தகத்தைப்பற்றியும் அதன் பின்னனியிலுள்ள அரசியலைப்பற்றியும் பெருமளவில் விழிப்புணர்வு நம் நாட்டில் தேவை. மேலை நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இலவசமாக கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்குவதின் நோக்கமம், நம் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் அவர்கள் காட்டும் ஆர்வமும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இதன் தொடர்பான உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது மிகவும் அவசியம் .
சட்டபூர்வமாக்கப்படும் அனைத்தும் அறவழியாகாது. சட்டங்கள் காலத்திற்க்கேற்ப மாறலாம் ஆனால் அறம் என்பது எந்நிலையிலும் மாறாதது. கருக்கலைப்பு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டாலும் அதன் விளைவாக ஏற்படும் உயிர்ச்சேதம் மற்றும் உடல், உள்ள, சமுதாய சீர்கேட்டை என்றும் நியாயப்படுத்த இயலாது. கருக்கலைப்பை ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு சமூகமும் வன்முறையையும் தன்னலத்தையும் ஊக்குவிக்கிறது. எனவே கருக்கலைப்பு மற்றும் அதுதொடர்பான உண்மைகளை அறிவதும் மற்றவரின் அறியாமையை அழிப்பதும் தனிமனித கடமை. 1.5 கோடி உயிர்பலி இதனை உறுதிப்படுத்துகிறது.
Add your comment